சுருள் பாசி வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சுருள் பாசி வளர்ப்பு பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுருள் பாசி (ஸ்பைருலினா) வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. இதில் சுருள் பாசி வளர்ப்பின் வரலாறு, முக்கியத்துவம், சுருள் பாசியில் அடங்கி உள்ள சத்துகள், சுருள் பாசி அன்றாட வாழ்வில் ஒரு அத்தியாவசிய மருந்து உணவு, சுருள் பாசியை தனிமைப்படுத்துதல், அடையாளம் காணுதல், சுருள் பாசி வளர்ப்பு தொழில்நுட்பங்கள், சுருள் பாசி சாகுபடி மற்றும் அதன் நிர்வாகத்தை பாதிக்கும் காரணிகள், சுருள் பாசி உற்பத்தி விகிதத்தை கணக்கிடுதல், சுருள் பாசி வளர்ப்பு முடிந்து அறுவடை செய்தல், உலர்த்துதல், தரக்கட்டுப்பாட்டு அம்சங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி செலவின கணக்கீடு குறித்து தொழில்நுட்ப விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
மாலையில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர், பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாய மக்கள் இந்த பயிற்சி மூலம் மாற்று தொழில் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். சுய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறினார். பயிற்சியில் தமிழகம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை மீன்வளர்ப்பு துறை தலைவர் சா.ஆதித்தன் செய்து இருந்தார்.