தர்மபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்-கலெக்டர் திவ்யதர்சினி பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.

Update: 2022-02-21 17:10 GMT
தர்மபுரி:
வாக்கு எண்ணிக்கை
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை தர்மபுரி அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நாளை (இன்று) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை பணியில் 300 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தர்மபுரி நகராட்சிக்கு 10 சுற்றுகளும், அரூர் பேரூராட்சிக்கு 15 சுற்றுகளும், மற்ற 9 பேரூராட்சிகளுக்கு 8 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்றில் 6 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதற்கான முடிவுகளை வெளியிட்ட பின்னர் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
செல்போனுக்கு அனுமதி இல்லை
வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் காத்திருப்பதற்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள மைதானத்தில் தனி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் உரிய வேட்பாளர்கள், முகவர்கள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதன் காரணமாக செல்போன்களை ஒப்படைக்க வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி கூறினார். 
பேட்டியின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்