தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் ஜவுளி பாரம் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
கன்டெய்னர் லாரி
குஜராத் மாநிலத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு ஜவுளி பாரம் ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குல்தீப்ஷேக்யா (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி தர்மபுரியை கடந்து தொப்பூர் கணவாயில் சென்று கொண்டிருந்தது.
தொப்பூர் கணவாய் 3-வது வளைவை கடந்தபோது லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் குல்தீப்ஷேக்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த குல்தீப்ஷேக்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இந்த விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.