அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு
ஆத்தூர் அருகே உள்ள குமாரப்பண்ணையூர், செல்வன்புதியவனூர் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா தொற்று மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கோரிக்கை மனுக்கள் செலுத்த வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆத்தூர் அருகே உள்ள குமாரப்பண்ணையூர், செல்வன் புதியவனூர் பகுதி மக்கள் ஊர்த்தலைவர்கள் ராஜா, அரிபுத்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் மனுவை போட்டனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சேர்ந்தமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமாரப்பண்ணையூர், செல்வன் புதியவனூர் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.
எங்கள் கிராமத்துக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. பஞ்சாயத்தில் இருந்து எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அரசின் திட்டங்கள் எங்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.