இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 கோடி போதைப்பொருள் சிக்கியது; 8 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-21 16:35 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

தீவிர கண்காணிப்பு 

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் மஞ்சள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் மஞ்சள் கடத்தப்பட்டு வந்தது. மேலும் கடல் அட்டை, வெங்காய விதை, பீடி இலை உள்ளிட்டவையும் கடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இலங்கையில் இருந்து ஆட்களும் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டனர். இதனால் தூத்துக்குடி கடத்தல் கேந்திரமாக மெல்ல, மெல்ல மாறி வருகிறது. 

இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ரூ.30 கோடி போதைப்பொருள்

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், வேலாயுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த படகில் சிலர் புறப்பட்டனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து படகை நிறுத்தினர்.

பின்னர் படகில் சோதனை நடத்தினர். அப்போது படகின் அடிப்பகுதியில் 5 பாலித்தீன் பைகளில் தலா 2 கிலோ வீதம் வெள்ளை நிற கற்கண்டு போன்ற பொருள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது அது கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. அது தனை ஐஸ் என்றும், சிந்தடிக் போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. போலீசாரிடம் சிக்கிய அந்த 10 கிலோ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

8 பேர் கைது

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ேபாதைப்பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற பரபரப்பு தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக கீழவைப்பார் தெற்கு தெருவை சேர்ந்த இருதயவாஸ் (வயது 43), கடற்கரை தெருவை சேர்ந்த கிங்பன் (25), வினிஸ்டன் (24), சிங்கார காலனியை சேர்ந்த சிலுவை (44), சுபாஷ் (26), சுனாமி காலனியை சேர்ந்த கபிலன் (21), சிப்பிக்குளம் மீனவர் காலனியை சேர்ந்த அஸ்வின் (27), வடக்கு தெருவை சேர்ந்த சைமன் என்ற சுக்கு (30) ஆகிய 8 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வாங்கியது எங்கே?

அந்த போதைப்பொருளை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருளை தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.  தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகள்