வேட்பாளர், முகவர்களுக்கு மட்டுமே அனுமதி

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளருடன், முகவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-02-21 16:32 GMT
பொள்ளாச்சி

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளருடன், முகவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நாளை(செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் மையம் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தபால் வாக்குகள்

கூட்டத்தில் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- 

ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தபால் வாக்குகளை எண்ணும்போது விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு உள்ளனரா?, உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்று சரிபார்க்கப்படும். சரியாக இல்லாத தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளருடன், முகவர் மட்டும் அனுமதிக்கப்படுவார். காலை 7 மணிக்கு சரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் இருக்க வேண்டும். மையத்திற்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் நபர்களை மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வார்கள். அதன்பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 

சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வேட்பாளர்கள், முகவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்போது கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். காலை 8 மணிக்கு சரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்