வேலூரில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை அமைத்து தரக்கோரிக்கை
வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் கலைக்கல்லூரியின் பின்புறம் சாஸ்திரிநகர், கணபதிநகர், முருகன்நகர், கன்னிகாபுரம், செட்டியார்தோப்பு, வள்ளலார்நகர் போன்ற பகுதிகளில் உள்ளன. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தனியார் கல்லூரியை ஒட்டியுள்ள சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையில் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வந்தனர். அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
மறியல் போராட்டம்
இந்த நிலையில் அந்த சாலையை அடைத்து சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணியளவில் சாய்நாதபுரம் பஸ்நிறுத்தம் அருகே வேலூர்-ஆரணி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த வேன், பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள், இருசக்கர வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டருக்கு சாலையில் அணிவகுந்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து வாகனங்களும் தொரப்பாடி சாலையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தற்போது மாநகராட்சி தேர்தல் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பின்னர் அதிகாரிகள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.