ஆசிரமத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு வானதி சீனிவாசன் ஆறுதல்
ஆசிரமத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு வானதி சீனிவாசன் ஆறுதல் கூறினார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஹேமமாலினி (வயது 20). ஹேமமாலினி திருவள்ளூர் அருகே தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹேமமாலினி திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்து கோட்டையில் உள்ள நாட்டு வைத்தியர் முனுசாமி என்பவரது ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு பூச்சி மருந்து குடித்த ஹேமமாலினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் முனுசாமி மீது பொய் புகார் அளித்ததாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெள்ளாத்துக்கோட்டை நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மாணவியின் தற்கொலை குறித்து தகவலறிந்த பா.ஜ.க. தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தற்கொலை செய்த மாணவி ஹேமமாலினியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.