பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சப்- இன்ஸ்பெக்டர் சாவு; தேர்தல் பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
பெருந்துறை அருகே தேர்தல் பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இறந்தாா்.
பெருந்துறை
பெருந்துறை அருகே தேர்தல் பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இறந்தாா்.
சப்-இன்ஸ்பெக்டர்
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 58). ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சுப்பிரமணியம் நேற்று முன்தினம் தேர்தல் பணி சம்பந்தமாக சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார். இதற்காக அவர் காஞ்சிக்கோவில் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். பெருந்துறையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே சென்றபோது நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
சாவு
இந்த விபத்தில் அவருடைய தலை ரோட்டோரத்தில் இருந்த கல் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.
விபத்து நள்ளிரவில் நடந்ததால் யாரும் அதை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், விபத்து குறித்து காஞ்சிக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.