பெண் பயணியிடம் ரூ.66¼ லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
பெண் பயணியிடம் ரூ.66¼ லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செம்பட்டு:
பயணிகளிடம் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மஸ்கட், ஓமன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்கள் உடைமைகளில் மறைத்து வைத்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
கரன்சிகள் பறிமுதல்
அப்போது நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த நாச்சியார் முகமது யூசுப் மரைக்காயர்(வயது 48) என்ற பெண் பயணி தனது கைப்பையில் ரூ.66 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான சவுதி அரேபிய தினார், யூரோ, அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்பட வெளிநாட்டு கரன்சிகளை எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால், அந்த கரன்சிகளை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.