யானை பாகனை கைது செய்ய கோரி பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம்

திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு யானை பாகனை கைது செய்ய கோரி பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-02-20 19:52 GMT
திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையை வள்ளி தேவ ேசனா மண்டப வளாகத்தில் பாதுகாப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் பயத்துடனும், தயக்கத்துடன் உரிய இடத்தைவிட்டு வெளியே சென்றதாகவும், யானை பாகன் மற்றும் யானை பாகனின் நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும் கூறி பாரதீய ஜனதாவினர் நேற்று மாலையில் கோவில் வாசல் முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் யானையிடம் பாதுகாப்பாக இருக்காமல் மது அருந்திய பாகனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கோவில் வாசல் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.
இதை அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் வேல்முருகன், இளைஞரணி பொறுப்பாளர் வெற்றி, இந்து முன்னணி பிரமுகர் ராஜசேகர் மற்றும் அனுமன் சேனா பொறுப்பாளர் ராமலிங்கம் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.இந்த நிலையில் நடந்த விவரங்கள் குறித்து யானை பாகனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்