நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? என மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-02-20 19:43 GMT
விருதுநகர், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? என மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
வாக்குப்பதிவு 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 68.4 சதவீதமும், 5 நகராட்சிகளில் சராசரியாக 67.14 சதவீதமும், 9 பேரூராட்சிகளில் சராசரியாக 76.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நகராட்சிகளின் அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 80.95 சதவீதமும், குறைந்தபட்சமாக விருதுநகர் நகராட்சியில் 64.75 சதவீதமும் பதிவாகியுள்ளது. பேரூராட்சிகளில் அதிகபட்சமாக சேத்தூர் பேரூராட்சியில் 80.95 சதவீதமும், குறைந்தபட்சமாக எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் 72.63 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கை 
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்கு பதிவாவதற்கு எந்த ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்காதது குறிப்பிடத்தக்க காரணம்.
 மேலும் நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குழப்பம், வாக்குச்சாவடி சீட்டு வினியோகத்தில் இருந்த குறைபாடும், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம் நிலவுவதாக புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வாக்காளர்கள் பலர் வாக்களிப்பதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் ஆய்வு 
 மேலும் விருதுநகர் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகாரிகள் பழைய வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்களிக்க வந்தவர்களில் உங்களுக்கு வாக்கு இல்லை என்று 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட வாக்காளர்கள் பலர் வாக்களிக்க திரும்ப வரவில்லை.
 தேர்தல் அலுவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்காததால் பல தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதேபோன்று வாக்குச்சாவடி சீட்டும் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. 
எனவே மாநில தேர்தல் ஆணையம் இனிவரும் காலங்களில் தேர்தல் நடத்தும்போது முதல் கட்டமாக குழப்பம் இல்லாமல் வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும், அனைத்து வாக்காளர்களுக்கும் முறையாக வாக்குச்சாவடிச்சீட்டை வினியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்