கிராமமக்கள்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆதனக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து கிராமமக்கள்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆதனக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து கிராமமக்கள்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய கூலித்தொழிலாளி சாவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் கோகிலவாசன் (வயது45). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஏற்பட்ட இடப்பிரச்சினை காரணமாக கோகிலவாசனை சிலர் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த கோகிலவாசனை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கோகிலவாசன் நேற்றுமுன்தினம் இரவு இறந்தார்.
தர்ணா
இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஏராளமானோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோகிலவாசன் உடலை வாங்க மறுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல் கேட் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர்கள் ராமையன், செந்தில்குமார், ஒன்றிய செயாளர்கள் ரத்தினவேல், அபிமன்னன், பன்னீர்செல்வம், இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி அரவிந்த்சாமி மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள், இந்திய மாணவர் சங்கத்தினர் பலரும் பங்கேற்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் இவர்கள், கோகிலவாசனை தாக்கி படுகொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். கோகிலவாசன் தரப்பினர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதை அறிந்த தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்களது கோரிக்கைபடி கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இந்த உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்ட கிராமமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோகிலவாசன் உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர் கோகிலவாசன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.