பெரம்பலூர் நகராட்சி-பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி ‘சீல்' வைப்பு
பெரம்பலூர் மாவட்ட நகராட்சி- பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.
பெரம்பலூர்,
69.11 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் நகராட்சி 21 வார்டுகளுக்கு 50 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 28,851 பேர் வாக்களித்தனர். பேரூராட்சிகளில் குரும்பலூரில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளில் 8,759 பேரும், அரும்பாவூரில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளில் 8,643 பேரும், பூலாம்பாடியில் 13 வார்டுகளுக்கு, 13 வாக்குச்சாவடிகளில் 6,088 பேரும், லெப்பைக்குடிகாட்டில் 15 வார்டுகளுக்கு, 17 வாக்குச்சாவடிகளில் 5,764 பேரும் வாக்களித்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 69.11 சதவீதம் வாக்குப்பதிவானது.
பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 110 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல்' வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணும் மையம்
பின்னர் அவற்றை லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் க.எறையூர் அருகே உள்ள மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு நேற்று அதிகாலை வரை கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து இறக்கப்பட்டு பள்ளியின் தரைத்தளத்தில் பேரூராட்சிகளுக்கு தனித்தனி பாதுகாப்பு அறைகளில் பாகம் வரிசையாக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டன.
நகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பள்ளியின் முதல் தளத்தில் தனி பாதுகாப்பு அறையில் பாகம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
பூட்டி ‘சீல்’ வைப்பு
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரத்னா, கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா, வட்டார தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது
பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மகாத்மா பப்ளிக் பள்ளியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி, முதலில் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
92 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 92 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 180 போலீசார் பாதுகாப்பு பணிகளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களுடன் இணைந்து ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் தலா 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் முகவர்கள் தங்குவதற்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையம் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும், அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.