பாய்லர் வெடித்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
சீ்ர்காழி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சீர்காழி:
சீ்ர்காழி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தொழிற்சாலை
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட தொடுவாய் மீனவ கிராமத்தில் கடல் சார்ந்த பல தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான மீன் அரவை தொழிற்சாலை மூலம் மீன் பவுடர் மற்றும் மீன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலைக்கு காரைக்கால், பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலிருந்து சிறிய வகை மீன்கள் மற்றும் மீன் கழிவு பொருட்களை தினமும் கொண்டு வந்து பதப்படுத்தி மீன் பவுடர் மற்றும் மீன் எண்ணெய் தயாரித்து தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
2 பேர் பலி
இந்த மீன் பவுடர் அல்லது எண்ணெய் மூலம் மீன்கள்,
இறால்களுக்கு தீவனங்கள் தயாரிக்கப்படுகிறது. நேற்று இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல வெளிமாநில தொழிலாளர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதியம் சுமார் 12மணி அளவில் திடீரென தொழிற்சாலையில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அப்போது அங்கு பணியில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரான் (வயது25), பல்ஜித்ஓரான்(21) ஆகிய இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பாய்லர் ஆபரேட்டர் எடமணல் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ரகுபதி (53), பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ஜாவித் (29) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
பிரேத பரிசோதனை
படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக
ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரகுபதி மற்றும் மாரிதாஸ் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இறந்து கிடந்த அருண்ஓரான், பல்ஜித்ஓரான் ஆகிய இருவரின் உடல்களையும் சீர்காழி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், தாசில்தார் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.
பாய்லர் வெடித்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடுவாய் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.