வேலூர் கோட்டை அகழியில் குதித்து சமையல் மாஸ்டர் தற்கொலை
வேலூர் கோட்டை அகழியில் குதித்து சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் கோட்டை அகழியில் குதித்து சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம் மிதந்தது
வேலூர் கோட்டை அகழியில் மீன்மார்க்கெட் எதிரே உள்ள பகுதியில் ஆண் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அருகே உள்ள வேலூர் வடக்கு போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அகழி தண்ணீரில் இறங்கி பிணத்தை மீட்டனர். பின்னர் வேலூர் வடக்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமையல் மாஸ்டர்
இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், இறந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மணி (வயது 52) என்பது தெரிய வந்தது. சமையல் மாஸ்டரான அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதில் இருந்து மீள்வதற்காக காட்பாடியில் உள்ள சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு திரும்பினார்.
பின்னர் வேலூரில உள்ள ஓட்டலில் வேலை பார்க்கப்போவதாக வீட்டில் கூறிய மணி கடந்த 12-ந் தேதி மீண்டும் வேலூருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கோட்டை அகழி தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.