கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு 3-ந் தேதி முற்றுகை போராட்டம். நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் தகவல்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்று அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் கோ. ஜெயசந்திரராஜா பேசினார்.

Update: 2022-02-20 18:10 GMT
திருவண்ணாமலை

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்று அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் கோ. ஜெயசந்திரராஜா பேசினார்.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள பூமாலை வணிகவளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.சி.சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயசங்கர் வரவேற்றார். 

இதில் மாநில துணை தலைவர் செஞ்சி சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கோ.ஜெயசந்திரராஜா கலந்து கொண்டு பேசினர். 

அப்போது அவர் கூறுகையில், பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்க கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி வழங்க ஏதுவாக புதிய விற்பனை முனையம் (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) எந்திரம் வழங்கப்பட வேண்டும். விற்பனை முனையத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கு பழுது நீக்கும் தொகைகளை விற்பனையாளர்களிடம் வசூலிப்பதை கைவிட வேண்டும். அதேபோல் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

முற்றுகை போராட்டம்

தரமற்ற அரிசியை வழங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் நியாயவிலை கடை பணியாளர்களை பணி நீக்கம் செய்து ஏற்கக்தக்கது அல்ல. எனவே நியாயவிலை கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த போராட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து 15 ஆயிரம் பங்கேற்க உள்ளனர். நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகளை அழைத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்