சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; 2 மாணவர்கள் பலி

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-02-20 18:06 GMT
ஈத்தாமொழி, 
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில் சாலையில்...
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜா மணி. இவருடைய மகன் தேவ அரசு (வயது 20), திருச்சியில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு வந்தார். 
பின்னர் அவர் மீண்டும் திருச்சிக்கு செல்ல முடிவு செய்தார். இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட அவர் நாகர்கோவில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். 
மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்
அதே சமயத்தில் ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்த ஜியோன் என்பவரின் மகன் லிஜோஸ் (20) என்பவர் ஈத்தாமொழியில் உள்ள நண்பரை காண ஸ்கூட்டரில் சென்றார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் பெரியவிளை பகுதியில் தேவஅரசு சென்ற மோட்டார் சைக்கிளும், லிஜோஸ் ஓட்டி சென்ற ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.  கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் இருவரும் இருசக்கர வாகனங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தேவஅரசு சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்ததாக தெரிகிறது.
2 மாணவர்கள் பலி
இதனால் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். லிஜோஸ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் லிஜோஸை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார் விரைந்து வந்து லிஜோஸ், தேவஅரசு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். 
விபத்தில் இறந்த 2 மாணவர்களின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்தில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.  

மேலும் செய்திகள்