பொள்ளாச்சி அருகே குளத்தை மண்கொட்டி மூடும் அவலம்

பொள்ளாச்சி அருகே குளம் மண் கொட்டி மூடப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-20 17:28 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே குளம் மண் கொட்டி மூடப்படுகிறது.  இதனை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிறுகுளம்

பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி சாலையில் டி.கோட்டாம்பட்டி பொதுக்கழிப்பிடம் எதிரே மழைநீர் தேங்கி நிற்கும் சிறுகுளம் உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக அங்கு கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது அந்த குளத்தின் ஒரு பகுதியை மண்ணை கொட்டி மூடினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், குளத்தை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டனர். இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் மண் மற்றும் கட்டிட கழிவுகளை குளத்தின் உள்ளே கொட்டி குளத்தை மூடினர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்

பொள்ளாச்சி  பணிக்கம்பட்டி சாலையில் டி.கோட்டாம்பட்டி அருகே, மழைநீர் தேங்கி நிற்கும் குளம் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருந்தது. குளம், நாளடைவில் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியது. தற்போது, அந்த இடத்தில் மண் கொட்டி குளம் மூடப்பட்டு வருகிறது. 
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய குளம், தற்போது மூடப்பட்டதால், ராஜேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் புகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளம் மூடப்படுவதை தடுப்பதோடு, சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்