தி.மு.க. வேட்பாளர் உள்பட 3 பேர் கைது

திண்டிவனத்தில் அ.தி.மு.க. பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க. வேட்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-20 17:17 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி கவுன்சிலரை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 13-வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது தி.மு.க. வேட்பாளர் பாபு(வயது 39) வாக்குச்சாவடிக்கு வந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் சுதா மற்றும் அவரது கணவர் சரவணன், மகன்கள் அசோக்குமார், சத்யநாராயணன் ஆகியோருக்கும், பாபு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுதா தரப்பினர் பாபுவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த பாபுவின் ஆதரவாளரான அபிஷேக்கிற்கும் அடி விழுந்தது. பதிலுக்கு பாபு தரப்பினர் சுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார், இரு தரப்பையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். 

பெண் வேட்பாளர் மீது தாக்குதல் 

இதனிடையே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் பணம் கொடுத்து தனக்கு வாக்களிக்கும்படி பாபு கூறியதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை அவர் தாக்கியதாகவும் சுதா ரோசணை போலீசில் புகார் அளித்தார்.இதேபோல் பாபு அளித்த புகாரின் பேரில் சுதாவின் மகன்களான அசோக்குமார், சத்யநாராயணன் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.இதுபற்றி அறிந்ததும் சுதாவும், அவரது கணவர் சரவணனும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு போலீசாரின் கண்முன் சுதாவையும், சரவணனையும் பாபு தரப்பினர் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. 

தி.மு.க. வேட்பாளர் கைது 

இது குறித்து சுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. வேட்பாளர் பாபு, இவரது ஆதரவாளர்கள் அபிலாஷ்(28), ராஜசூர்யா (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுரேஷ், சிவகுமார், அபிஷேக் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
இதேபோல் பாபுவின் ஆதரவாளரான சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சுதாவின் மகன்களான அசோக்குமார் (வயது 23), சத்யநாராயணன் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

பதற்றம்; போலீஸ் குவிப்பு 

இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்ப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
முன்னாள் அமைச்சர் ஆறுதல்
இதனிடையே தி.மு.க.வினரின் தாக்குதலால் காயமடைந்த சுதா சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜுனன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், ராமதாஸ், பன்னீர், மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்