மாயமான போலீஸ்காரர் பிணமாக மீட்பு
விக்கிரவாண்டி அருகே மாயமான போலீஸ்காரர் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ஏழாம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). மயிலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேல்முருகன் தனது மனைவி தமிழரசியிடம் தேர்தல் பணிக்காக விக்கிரவாண்டிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசி விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விக்கிரவாண்டியில் இருந்து குத்தாம்பூண்டி செல்லும் சாலையில் பயன்பாட்டில் இல்லாத ரைஸ் மில் தோட்டப்பகுதியில் வேல்முருகன் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேல்முருகன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.