கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும்
பழனி ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மாத கிருத்திகை, வார விடுமுறை, சுபமுகூர்த்தம், விசேஷ நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ரெயில் மூலம் அதிகளவில் வருகின்றனர். பக்தர்கள், பயணிகள் வசதிக்காக பாலக்காடு எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும். பாசஞ்சர் ரெயிலுக்கான டிக்கெட் பயணத்துக்கு முன்பாக எடுத்து கொள்ளலாம். பழனியில் முன்பதிவு, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க தலா ஒரு டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகிறது.
இந்நிலையில் பழனியில் கூட்டம் அதிகமுள்ள நாட்களில் பழனி ரெயில் நிலையத்துக்கு வரும் பக்தர்கள் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அதோடு சில நேரங்களில் ரெயிலை தவற விடுகின்றனர். அந்த வகையில் நேற்று வாரவிடுமுறை, முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது.
மாலையில் சொந்த ஊர் செல்ல பக்தர்கள் பழனி ரெயில்நிலையத்தில் குவிந்ததால் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் பயணிகள், பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே விசேஷம், வாரவிடுமுறை நாட்களில் பக்தர்களின் நலனுக்காக பழனி ரெயில்நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.