தனியார் பஸ் டிரைவர்களிடையே வாக்குவாதம்
தனியார் பஸ் டிரைவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தோகைமலை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் இருந்து திருச்சிக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் மதியம் 2.50 மணிக்கு தோகைமலை பஸ் நிலையத்திற்கு வர வேண்டிய அந்த பஸ் தாமதமாக மதியம் 3.15 மணி அளவில் வந்து பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் குளித்தலையில் இருந்து திருச்சி செல்லும் மற்றொரு தனியார் பஸ் மதியம் 3.15 மணிக்கு செல்லும்போது பயணிகள் பஸ் நிறுத்தத்தில் இல்லாததை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.
பின்னர் பின்னால் வந்த தனியார் பஸ் டிரைவர், முன்னாள் சென்ற பஸ்சை மறித்து சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர். இதனால் திருச்சி-தோகைமலை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.