பல்லடத்தில் கார் ஓட்டி பழகியபோது லாரி மீது மோதியதில் மாணவர் பலி
பல்லடத்தில் கார் ஓட்டி பழகியபோது லாரி மீது மோதியதில் மாணவர் பலி
பல்லடம்,
பல்லடத்தில் கார் ஓட்டி பழகியபோது லாரி மீது மோதியதில் மாணவர் பலியானார். அவரது நண்பர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன்கள் தமிழ்வாணன் (வயது 17), ஸ்ரீதர் (15). இவர்கள் இருவரும் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17), ஹரி கிருஷ்ணன்(17), தினேஷ் குமார்(17) ஆகியோருடன் கார் ஓட்டிப் பழகுவதற்காக தங்களது உறவினர் ஒருவருக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு சென்றனர். அந்த கார் பல்லடம்-மங்கலம் ரோட்டில் அம்மாபாளையம் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
5 பேர் காயம்
காருக்குள் இருந்த மற்ற 5 பேரும் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.