ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தெப்பத்திருவிழா
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியானதுமான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதா் ஆழ்வார் கோவில் அமைந்துள்ளது. இது சுவாமி நம்மாழ்வாா் அவதரித்த தலமாகும். நம்மாழ்வாரின் திவ்யமங்கள விக்ரஹம் கிடைத்த நன்னாளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மாசி தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6.30 மணியளவில் நம்மாழ்வாா் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து ஜீயா் சுவாமிகள் முன்னிலையில், காலை 8.30 மணியளவில் திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.
ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோபாலா’ என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் வலம் வந்த தேரானது காலை 11 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
23-ந்தேதி தீர்த்தவாரி
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) இரவில் நம்மாழ்வார் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 11-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவில் பெருமாள் ெதப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் நிறைவு நாளான 23-ந்தேதி (புதன்கிழமை) நம்மாழ்வாா் விக்ரஹம் கிடைத்த மாசி விசாகத்தன்று தாமிரபரணியில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அலுவலர் அஜித் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனா்.