அங்கன்வாடி பணியாளருக்கு அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே அங்கன்வாடி பணியாளரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
கயத்தாறு:
கயத்தாறு அருகே பணிகர்குளம் கீழத் தெருவில் வசித்து வருபவர் ஜெயமுருகன். இவரது மனைவி பூல்தாய் (வயது 40). அவர் சாலைப்புதூர் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த பூலையாத்தேவர் மகன் பரமசிவம் என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பூல்தாய் வீட்டிற்குள், பரமசிவமும் அவரது மனைவி மாரியம்மாள், மகன் மலையரசன் ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரை அவதூறாக பேசியதுடன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூல்தாயை சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பூல்த்தாய் சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்ட 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் பூல்தாயை மீட்டு 108 ஆம்புலன்சில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பரமசிவம், மாரியம்மாள், மலையரசன் ஆகிய 3 பேர் மீது கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் பால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.