சேலத்தில் ஏராளமான கடைகள் அடைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சேலம்:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இதற்காக சேலம் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 709 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு அளித்தனர். தேர்தலையொட்டி சேலம் கடைவீதி, முதல் மற்றும் 2-வது அக்ரஹாரம், ஜான்சன்பேட்டை, மரவனேரி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, அஸ்தம்பட்டி, மணக்காடு, சூரமங்கலம், அழகாபுரம் உள்ளிட்ட மாநகர் பகுதியில் ஒரு சில துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஓட்டல்கள் திறந்திருந்தன
இது குறித்து கடை உரிமையாளர்கள் சிலர் கூறும் போது, எங்கள் வார்டு உறுப்பினரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதனால் வாக்கு அளிக்கும் ஆர்வத்தில் கடைகளை அடைத்து விட்டு வாக்கு அளித்தோம் என்று கூறினர்.
மேலும் வாக்குப்பதிவு மையம் அமைந்த பகுதியில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் கூறும் போது வாக்குப்பதிவு மையங்களை யொட்டி தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பந்தல் அமைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கடைகளை அடைத்தோம் என்று கூறினர். அதன்படி மாநகராட்சி பகுதியில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள் திறந்திருந்தன.