முதல் முறையாக வாக்களித்தவர்களின் அனுபவம்; தள்ளாத வயதிலும் ஆர்வத்துடன் வந்த முதியவர்கள்

முதல் முறையாக வாக்களித்தவர்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

Update: 2022-02-19 20:26 GMT
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைெபற்றது. அதில் முதன் முறையாக ஜனநாயக கடமை ஆற்றிய இளம் வாக்காளர்களும், தள்ளாத வயதிலும், தளராமல் வாக்களித்த முதியவர்களும் மகிழ்ச்சியுடன் வாக்கு அளித்த பிறகு கூறியதாவது:- 
வரதராஜன் 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தேர்தலில் முதன்முதலாக ஓட்டு போடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் மகிழ்ச்சியுடன் வாக்கு அளித்துள்ளேன். என்னுடைய ஜனநாயக கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவேன். 
அருண் 
என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. நான் அதிகாலையிலேயே சென்று வாக்கு அளித்ததேன். 
சுவேதா 
அருப்புக்கோட்டை நகராட்சி தேர்தலில் 32-வது வார்டில் பழைய தேவாங்கர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தேன்.  சரியான வேட்பாளருக்கு வாக்களித்தேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 
சூர்யா 
வத்திராயிருப்பை சேர்ந்த நான் முதன் முதலில் ஜனநாயக கடமை ஆற்றி உள்ளேன். வார்டில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர் யார் என்று முடிவு செய்து அவருக்கு எனது வாக்கினை செலுத்தி உள்ளேன். முதல் முறையாக ஜனநாயக கடமை ஆற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பவித்ரா 
  சிவகாசி இந்து தேவமார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்கு எனது குடும்பத்துடன் சென்று வாக்கு அளித்தேன்.. இதை ஒரு வேலையாக கருதாமல் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்த திருவிழாவில் கலந்து கொள்ள எனக்கு எப்போது வாய்ப்பு வரும் என்று காத்திருந்தேன். தற்போது வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது. 
ஜீவிகா
விருதுநகர் ெரயில்வே காலனியை சேர்ந்த நான் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். முதன்முதலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எனது வாக்கை பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் நமக்கு நெருக்கமாக உள்ள மக்கள் பிரதிநிதி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி தான். எனவே நாம் அன்றாடம் சந்திக்கும் வகையில் நமக்கு சேவை செய்யும் நபருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது வாக்கைபதிவு செய்து உள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
 காவியா
 விருதுநகர் தோப்பு தெருவில் பெற்றோருடன் வசிக்கிறேன். நான் நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வருகிறேன். தற்போது தான் முதன் முதலில் எனது வாக்கை பதிவு செய்கிறேன். நமக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிதான். எனவே வார்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நபரை தேர்ந்தெடுத்து நான் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன்.
கருப்பசாமி 
சாத்தூர் 19-வது வார்டில் முதல் முறையாக வாக்கு அளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.  பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் மத்தியில் ஜனநாயக கடமை ஆற்றியது மிகுந்த உற்சாகமாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றுபவருக்கே வாக்களித்துள்ளேன்.
சபரி ரவீந்தர் 
ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் நான் புதிய இளம் வாக்காளர் ஆவேன். ராஜபாளையம் நகராட்சியில் நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளேன். 
 நவீனா 
ராஜபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த நான் இந்த உள்ளாட்சி தேர்தலில்  முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இதுவரை எனது பெற்றோர்கள் வாக்களிக்க செல்வதை தான் பார்த்துள்ளேன். முதல் முறையாக நானும் வரிசையில் நின்று வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பர்வதம்
சாத்தூர் நகர் பெருமாள் கோவில் தெருவை ேசர்ந்தவர் பர்வதம் (வயது 92). இவர் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டு கூறியதாவது, தேர்தல் நேரத்தில் வாக்களிக்க வேண்டியது அனைவரின் ஜனநாயக கடமையாகும். தேர்தல் அறிவித்த உடனே வாக்குப்பதிவு நடைபெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். வழக்கம்போல் இந்த முறையும் வாக்களிப்பதற்காக எனது மகள் சுந்தரி என்னை அழைத்து வந்தார். (இதுவரை மொத்தம் 38 முறை வாக்களித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது). 
சேசையா 
அருப்புக்கோட்டை வாக்குச்சாவடி எண் -2 ல் வாக்குப்பதிவு செய்த சேசையா (வயது 101) கூறியதாவது:- 
முன்பு இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. அப்போது வாக்குப்பதிவு வாக்கு சீட்டு முறையில் நடைபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவேன். உடற்பயிற்சி மிக முக்கியமானது. இளமையிலிருந்தே விவசாயம் செய்து வந்தேன். தற்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வருகின்ற தேர்தலிலும் ெதாடர்ந்து சிறந்த ேவட்பாளரை தேர்ந்து எடுப்பேன்.

மேலும் செய்திகள்