நீண்ட வரிசையில் நின்று ஓட்டுபோட்ட வாக்காளர்கள்

நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.

Update: 2022-02-19 20:12 GMT
அரியலூர்:

வாக்குப்பதிவு
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவிற்காக மாவட்டம் முழுவதும் 102 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்பட்டது.
வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு முககவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. கிருமி நாசினி மூலம் கைசுத்தம் செய்த பின்னரே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் அமைதியான முறையில் விறுவிறுப்பாகவும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
கண்காணிப்பு
மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டிருந்ததால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டு, சரிசெய்ய முடியாத நிலையில் பயன்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரமண சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி தலைமையில் அலுவலர்கள் கண்காணித்தனர். மாவட்டத்தில் தேர்தல் பணியில் 488 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் ேபாலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் உள்பட 300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 38 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உற்சாகமாக வருகை தந்து வாக்களித்தனர். இதில் சில வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு முன்னதாக கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, கையுறை வழங்கப்பட்டது. இந்த பணியில் செவிலியர்களும் ஈடுபட்டனர். பின்னர் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வாக்களிப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முககவசம் அணிந்து வராமல் வந்த பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
வாக்குப்பதிவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகராட்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், திருமேனி, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பாக போலீசார் நின்று, பொதுமக்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் பணியில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை
உடையார்பாளையம் பேரூராட்சியில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 4-வது வார்டில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பேட்டரி மாற்றி சரி செய்யப்பட்டது. 5-வது வார்டில் முதியோர் வாக்களிக்க பயன்படுத்தும் சக்கர நாற்காலி வேலை செய்யவில்லை. இதனால் முதியோர்கள் சிரமப்பட்டு வாக்களித்து சென்றனர். பெரும்பாலான வார்டுகளில் வாக்குச்சாவடி மையங்களில் சில நேரங்களில் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் காலை நேரத்தில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த அமலோற்பவம்(வயது 95 என்ற மூதாட்டி தள்ளாத வயதிலும் வாக்காளிக்க ஆர்வம் காட்டியதால் வாக்குச்சாவடி வரை கார் மூலம் அழைத்து வரப்பட்டார். பின்னர் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

மேலும் செய்திகள்