மணலூர் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

மணலூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-02-19 20:07 GMT
அய்யம்பேட்டை:
மணலூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை)  நடக்கிறது. 
மணலூர் மகாமாரியம்மன் கோவில் 
பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை அருகே மணலூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. மணலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மகாமாரியம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறது. இந்த கிராமங்களில் கடுமையான அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மணலூர் மாரியம்மன் கோவிலில் சில நாட்கள் தங்கி, அம்மனை மனமுருக வழிபட்டு பூரண குணம் பெற்று செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடும், கன்னிப்பொங்கலன்று காவிரி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும் நடைபெறுவது வழக்கம். 
குடமுழுக்கு 
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் முத்துப்பல்லக்கு தேரோட்டமும், செடில் திருவிழாவும் தஞ்சை மாவட்ட விழாக்களில் முக்கியமான விழாவாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவில் குடமுழுக்கு கடந்த 1990, 2007-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இக் கோவிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று, சிற்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு  நடக்கிறது. 
விழாவை முன்னிட்டு கணபதி பூஜையுடன், யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4 கால பூஜைகள் நிறைவடைந்து இன்று காலை 8.05 மணிக்கு அய்யனார், திரவுபதி அம்மன், விநாயகர் பெருமாள் கோவில்கள் குடமுழுக்கும், தொடர்ந்து மகா மாரியம்மன் விமானம், ராஜகோபுரம், மூலவர் குடமுழுக்கும் நடக்கிறது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. பின்னர் மகா அபிசேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் கிராம நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்