வாக்குச்சாவடிக்கு வெளியே தே.மு.தி.க.வினர் மீது தாக்குதல்
சிவகாசியில் வாக்குச்சாவடிக்கு வெளியே ேத.மு.தி.க.வினர் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசியில் வாக்குச்சாவடிக்கு வெளியே ேத.மு.தி.க.வினர் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு
சிவகாசி மாநகராட்சி 26-வது வார்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் சூரியா, அ.தி.மு.க. சார்பில் கணேசன், பா. ஜனதா சார்பில் செல்வம், தே.மு.தி.க. சார்பில் கருப்பசாமி உள்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த வார்டு பகுதி மக்கள் வாக்களிக்க வசதியாக ரத்தினவிலாஸ் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. மதியம் 2 மணி வரை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தே.மு.தி.க.வினர் மீது தாக்குதல்
இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்களிக்க வந்தவர்களிடம் ஆதரவு திரட்டியபடி இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர், வாக்காளர் ஒருவரை அழைத்து சென்று பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் கருப்பசாமியின் ஆதரவாளர் கண்டித்துள்ளார். உடனே அந்த நபர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சம்பவ இடத்தில் நின்றிருந்த தே.மு.தி.க.வை சேர்ந்த சிலர் இதை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், தே.மு.தி.க.வினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதை அறிந்ததும் தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த மேலும் பலர் அங்கு திரண்டனர். தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரி-வேலாயுதம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையில் தே.மு.தி.க.வினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஷெரீப், அவைத்தலைவர் ஜெயபாண்டியன், பொருளாளர் முத்துவேல், ஒன்றிய செயலாளர்கள் செந்தில், குருசாமி, நகர செயலாளர்கள் சந்திரசேகர், கோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.