அன்வய் நாயக் தற்கொலையில் கிரித் சோமையாவுக்கு தொடர்பு சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
அன்வய் நாயக் தற்கொலையில் கிரித் சோமையாவுக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
அன்வய் நாயக் தற்கொலையில் கிரித் சோமையாவுக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறினார். இந்தநிலையில் சஞ்சய் ராவத், கிரித் சோமையா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதில் நேற்று முன்தினம் உள் அலங்கார டிசைனர் அன்வய் நாயக் தற்கொலையில் கிரித் சோமையாவுக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
அன்வய் நாயக்கை மிரட்டினார்
இது குறித்து அவர் கூறுகையில், "அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த கட்டண ரசீதுகளையும் அனுப்ப கூடாது என கிரித் சோமையா மிரட்டி உள்ளார். அதன்பிறகு அன்வய் நாயக் தற்கொலை செய்து உள்ளார். இதுதொடர்பாக கிரித் சோமையா மீது மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்படும். தந்தையும், மகனும் ஜெயிலுக்கு போவது உறுதி." என்றார்.
அன்வய் நாயக் மற்றும் அவரது தாய் 2018-ம் ஆண்டு மே மாதம் அலிபாக்கில் உள்ள அவரது பங்களாவில் பிணமாக மீட்கப்பட்டனர். அன்வய் நாயக், அர்னாப் கோஸ்வாமிக்கு வேலை செய்ததாகவும், அதற்கு அவர் உரிய பணத்தை கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே அன்வய் நாயக் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.