நெய்வேலி அருகே கார் மோதி 2 பெண்கள் பலி
நெய்வேலி அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
நெய்வேலி,
திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர் பாஷா(வயது 62). இவர் பண்ருட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது காரில் வந்தார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று காலை திருவாரூர் புறப்பட்டார்.
நெய்வேலி அடுத்த இந்திராநகர் ஆர்ச் கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென அக்பர் பாஷாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதியது. மேலும் அருகில் இருந்த சாலையோர தள்ளுவண்டி பழக்கடைகள், அதன் அருகில் நின்றவர்கள் மற்றும் மற்றொரு கார் மீதும் மோதி நின்றது.
2 பெண்கள் பலி
இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மனைவி வனிதா(40), தள்ளுவண்டி பழக்கடை அருகே அமர்ந்திருந்த பி 2 பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்த சின்னசாமி மனைவி முத்தம்மாள்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் சாலையோரம் நடந்து வந்த வனிதா மகள் ஜனனி(14), சாலையோர பழக்கடை வியாபாரிகளான மாற்று குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி ராணி(45), பண்ருட்டி கட்டியம்பாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி தங்கம்(52) மற்றும் பழக்கடை அருகில் நின்று கொண்டிருந்த மாற்று குடியிருப்பை சேர்ந்த சின்னசாமி(65), பெரியாக்குறிச்சியை சேர்ந்த சாரங்கபாணி மகன் குமரேசன்(32) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான வனிதா, முத்தம்மாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி. ஆர்ச் கேட் பகுதியில் இருந்து இந்திரா நகர் ஆர்ச் கேட் வரை போடப்பட்டுள்ள தற்காலிக சாலையின் இருபுறங்களிலும் தள்ளுவண்டியில் பழங்கள், காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளை அருகில் உள்ள மைதானத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.