உற்சாகத்துடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இளம் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். குழந்தைகளுடன் வந்து பெண்கள் பலர் வாக்களித்தனர்.

Update: 2022-02-19 17:20 GMT
தஞ்சாவூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இளம் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். குழந்தைகளுடன் வந்து பெண்கள் பலர் வாக்களித்தனர்.
இளம் வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
குறிப்பாக 18 வயது நிரம்பிய வாக்காளர்களாக பதிவு செய்திருந்த இளைஞர்களும், இளம்பெண்களும் முதன்முதலாக தங்களது வாக்கினை பதிவு செய்திட வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். அவர்கள் தங்களின் முதல் வாக்கை பதிவு செய்துவிட்டு மிகவும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்தனர்.
குடிமகன்
கைவிரலில் மை வைக்கப்பட்டிருந்ததை மகிழ்ச்சியுடன் காண்பித்த இளம் வாக்காளர்கள் கூறும்போது, தற்போது வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து வரிசையில் காத்திருந்து எங்களது முதல் வாக்கை பதிவு செய்த இந்த தருணம் நாங்களும் இந்த நாட்டின் குடிமகன் என்பதை முழுமையாக உணர செய்துள்ளது என்றனர்.
அதேபோல் கடந்த சட்டசபை தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்துவிட்டு தற்போது 2-வது தடவையாக தங்களது வாக்கை பதிவு செய்ய இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களித்தனர்.
குழந்தைகளுடன் வந்த பெண்கள்
பெண்கள் பலர் தங்களது குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருந்தனர். கைக்குழந்தைகளை தூக்கி கொண்டும் பெண்கள் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளுக்கு கணவன், மனைவி இருவரும் கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்திருந்தனர். மனைவி வாக்களிக்க சென்றபோது கைக்குழந்தையுடன் வாக்குச்சாவடிக்கு வெளியே கணவன் காத்திருந்தார். மனைவி வந்தபிறகு அவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு கணவரும் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

மேலும் செய்திகள்