30 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்
கம்பம் அருகே வாக்காளர்களுக்கு ஆட்டிறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. 30 கிலோ ஆட்டிறைச்சியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்:
வாக்காளர்களுக்கு ஆட்டிறைச்சி
தேனி மாவட்டம் கம்பம் அருகே, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாறி, மாறி புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் சில வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆட்டிறைச்சி வினியோகம் செய்ததாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி வரதராஜன் தலைமையிலான குழுவினர், ஒவ்வொரு வார்டாக சோதனை செய்தனர்.
30 கிலோ பறிமுதல்
அப்போது 12-வது வார்டுக்கு உட்பட்ட கள்ளர் பள்ளி தெருவில் வாளியுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து, வாளியை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ எடை கொண்ட ஆட்டிறைச்சி பாக்கெட்டுகள் இருந்தன. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, தான் இறைச்சிக்கடைகாரர் என்றும், வாக்காளர்களுக்கு வீடு, வீடாக இறைச்சி வினியோகம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது கடையிலும், பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அங்கு ஒரு கிலோ எடை கொண்ட ஆட்டிறைச்சி பாக்கெட்டுகள் இருந்தன. அவரிடம் இருந்து 30 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரி வரதராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு ஆட்டிறைச்சி கொடுக்க சொன்னது எந்த கட்சியினர் என்பது குறித்து இறைச்சி கடைக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுக்கு இறைச்சி வினியோகம் செய்த சம்பவம், கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.