8-வது வார்டு இடஒதுக்கீட்டை கண்டித்து வாக்குச்சாவடி முன்பு பொதுமக்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்-நாகோஜனஅள்ளியில் பரபரப்பு

நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 8-வது வார்டு இடஒதுக்கீட்டை கண்டித்து வாக்குச்சாவடி முன்பு பொதுமக்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-19 17:12 GMT
மத்தூர்:
நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 8-வது வார்டு இடஒதுக்கீட்டை கண்டித்து வாக்குச்சாவடி முன்பு பொதுமக்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் நேற்று ஓட்டுப்பதிவு மும்முரமாக நடைபெற்றது. இந்த பேரூராட்சி பகுதியில் வார்டுகள் மறு வரையறை செய்த பின்பு 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தட்டக்கல், மழவராயன் தெரு, மொடக்கு, காட்டு கொள்ளை உள்ளிட்ட சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
8-வது வார்டுக்கான ஓட்டுப்பதிவு, தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர், திடீரென கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
8-வது வார்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் இருந்து வருவதாகவும், இதை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அதை பொது வார்டாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி சுமார் 20 நிமிடங்கள் வரை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுப்போட்டனர்
பின்னர் பொதுமக்கள் அவர்களாகவே சமாதானம் அடைந்து வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் ஓட்டுக்களை போட்டுவிட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு திரும்பினார்கள்.
இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, நாகோஜனஅள்ளி பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பல வார்டுகளை தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருந்தும், தொடர்ந்து 8-வது வார்டையே தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டினார்கள்.
இந்த போராட்டம் காரணமாக தட்டக்கல் வாக்குச்சாவடியில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்