தேர்தல் நடப்பது 2021-வது ஆண்டா, 2022-ம் ஆண்டா? குழப்பத்தை ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் நடப்பது 2021-வது ஆண்டா, 2022-ம் ஆண்டா? என்று தேர்தல் ஆணையம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-19 16:59 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில்  வாக்காளர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளானர்கள். 

அதாவது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்யும் இடத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 என்று அட்டை பெட்டியில் எழுதப்பட்டு இருந்தது.

அதாவது நடப்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-ம் ஆண்டு, ஆனால் 2021-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் என்று இருந்த வாசகத்தை கூட மாற்றாமல், வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளனர் என்று வாக்காளர்கள் புலம்பி சென்றனர். 

இதில் சில வாக்குச்சாவடிகளில் 2021 என்று இருந்த ஆண்டில் இறுதியாக இருந்த 1 என்கிற எண்ணை மட்டும் 2 என்று திருத்தி இருந்தனர். ஆனால் அதற்கு மேல் இருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் என்ற வாசகம் மட்டும் அப்படியே இருந்தது. 

இதை பார்த்த வாக்காளர்கள் அனைத்தையும் செய்தவர்கள் ‘மண்டை மீது இருந்த கொண்டையை மறந்து விட்டார்களே’ என்று நடிகர் வடிவேலு பாணியில் நகைச்சுவை வசனத்தை கூறியபடி சென்றனர். 

இவ்வளவு பிரச்சினை இருந்த இந்த வாக்குச்சாவடிகளில் தான் முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும். 
கடந்த ஆண்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அட்டை பெட்டிகளை கொண்டு வந்து இதில் பயன்படுத்தி உள்ளனா். 

இதில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2022 என்று எழுதி ஜெராக்ஸ் (நகல்) எடுத்து ஒட்டியிருந்தால் கூட இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது, ஆனால் அதை கூட செய்ய தவறி விட்டனர் என்று வாக்காளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்