ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை டாக்டர் ராமதாஸ் பேட்டி
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம்,
திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதி அம்மாள், மகள் கவிதாவுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலில் ஓட்டு போட பொதுமக்களுக்கு ரூ.5,000, ரூ.10,000 என பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளாமல் கண்மூடி கிடக்கிறது.
ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடப்பதில்லை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான்.
ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வரை பணம் வழங்கியதால் யாருக்கு ஓட்டு போடுவது என மக்கள் திணறி போகிறார்கள். இதனால் நல்லவர்களுக்கு வாக்களிப்பது என்பது இல்லாமல் போகிறது.
யார் நல்லவர்
தேர்தலில் நிற்கும் நபர்களில் யார் நல்லவர் என்று பார்த்து ஓட்டு போடும் நிலை உருவாக வேண்டும். அப்போது பா.ம.க.வின் வேட்பாளர்கள் தான் நினைவில் வர வேண்டும். ஏனென்றால் நாங்கள் பயிற்சி அரங்கத்தில் பயிற்சி கொடுத்து நியாயமாக நடந்துகொள்ள அறிவுறுத்தி வருகிறோம்.
11-வது அட்டவணைப்படி ஊராட்சி பஞ்சாயத்துகள், 12-வது அட்டவணைப்படி நகராட்சிகளும் செயல்பட்டால் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பொது சுகாதாரம் உள்பட அனைத்தும் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.