பொள்ளாச்சி நகராட்சியில் 65 சதவீத வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் 65 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. வால்பாறையில் 34,044 பேர் ஓட்டு போட்டனர்.
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் 65 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. வால்பாறையில் 34,044 பேர் ஓட்டு போட்டனர்.
64 சதவீத வாக்குப்பதிவு
பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குபதிவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. காலை நேரத்தில் விறு, விறுப்பாக நடந்த வாக்குபதிவு மதியம் 2 மணிக்கு பிறகு மந்தமானது.
பொள்ளாச்சி நகராட்சியில் ஆண்கள் 26,052 பேரும், பெண்கள் 27,622 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 53,675 பேர் வாக்களித்தனர். இது 65 சதவீதம் ஆகும்.
ஜமீன் ஊத்துக்குளி
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் ஆண்கள் 6396 பேரும், பெண்கள் 6789 பேரும் சேர்த்து 13,185 பேர் வாக்களித்தனர். இது 68 சதவீதம் ஆகும். ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் ஆண்கள் 5416 பேரும், பெண்கள் 5863 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து 11,280 பேர் வாக்களித்தனர். இது 73 சதவீதம் ஆகும்.
கிணத்துக்கடவு பேரூராட்சியில் ஆண்கள் 3309 பேரும், பெண்கள் 3651 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 6961 பேர் வாக்களித்தனர். இது 80.58 சதவீதம் ஆகும். நெகமத்தில் ஆண்கள் 1269 பேரும், பெண்கள் 1437 பேரும் சேர்த்து மொத்தம் 2,706 பேர் வாக்களித்தனர். இது 75 சதவீதம் ஆகும்.
கொரோனா நோயாளிகள்
ஆனைமலை தாலுகாவில் உள்ள 5 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 84 வார்டுகளில் 289 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
கொரோனா அறிகுறி உள்ள 3 பேர் ஓட்டு போட்டனர்.
ஆனைமலை பேரூராட்சியில் 69 சதவீத வாக்குப்பதிவும், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் 74 சதவீத வாக்குப்பதிவும், ஒடையகுளம் பேரூராட்சியில் 78 சதவீத வாக்குப்பதிவும், சமத்தூர் பேரூராட்சியில் 77 சதவீத வாக்குப்பதிவும், கோட்டூர் பேரூராட்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும் நடந்தது.
பழங்குடியின மக்கள்
வால்பாறை நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கு 73 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், மந்தமாகவே இருந்தது. மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் விறு விறுப்பாக நடந்தது. நல்லமுடி எஸ்டேட் வாக்குச்சாவடியில் பழங்குடியின மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிங்கோனா எஸ்டேட் வாக்குச்சாவடியில் பெயர் மாற்றம் காரணமாக ஒருவருக்கு பதில் மற்றொருவர் வாக்களித்துவிட்டார். இதனால் கள்ள ஒட்டு போட்டதாக தகவல் பரவி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் முகவர்களிடம், அதுகுறித்து அலுவலர்கள் விளக்கி சமரசம் செய்தனர். வாக்குப்பதிவு நேரம் முடிந்து வாக்களிக்க பலர் வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியில் ஆண்கள் 16,344 பேரும், பெண்கள் 17,699 பேரும் என மொத்தம் 34,044 பேர் வாக்களித்தனர். இது 57.99 சதவீதம் ஆகும்.
காட்டுயானைகள்
இதற்கிடையில் நேற்று இரவில் முருகாளி எஸ்டேட் வாக்குச்சாவடிக்கு அருகே 17 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் வந்தது. மேலும் பன்னிமேடு எஸ்டேட் வாக்குச்சாவடிக்கு அருகில் 19 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் வந்தது. இதனால் அலுவலர்கள் அச்சம் அடைந்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டினர்.