தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-02-19 16:13 GMT
திண்டுக்கல்:
வீடுகளை ஆக்கிரமிக்கும் மரங்கள் 
சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டி வடக்கு தெருவில் ஏராளமான மரங்கள் வீடுகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இந்த மரங்களை சுற்றிலும் உள்ள பல வீடுகளின் மேற்கூரை ஓடுகளால் ஆனது. எனவே மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து விழுந்தால் வீடுகள் சேதமடையும். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னத்தம்பி, கோணப்பட்டி.
புதிய கட்டிடம் கட்டப்படுமா?
சின்னமனூரை அடுத்த காமாட்சிபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டிடம் சேதமடைந்ததால் அதனை அதிகாரிகள் இடித்து அகற்றிவிட்டனர். தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் அப்பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்த கட்டிடமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சரவணபிரியன், காமாட்சிபுரம்.
சாக்கடை கால்வாயாக மாறிய சாலை
போடி காமராஜபுரம் ஊராட்சி மாணிக்காபுரம் மேற்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை தற்போது சாக்கடை கால்வாயாக மாறி வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், மாணிக்காபுரம்.
கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல்
பழனியில், திண்டுக்கல் சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் அருகில் பழக்கழிவுகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனை சாப்பிடுவதற்காக கால்நடைகள் சாலையின் நடுவே வருகின்றன. அப்போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே பழக்கழிவுகளை சாலையில் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், பழனி.

மேலும் செய்திகள்