திருவள்ளூர் மாவட்டத்தில் 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கலெக்டர் தகவல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் 282 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட தேர்தல் பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் என மொத்தம் 318 வார்டுகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 315 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,797 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்காக 825 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் பதற்றமானதாக 282 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மற்ற வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலை விடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க 16 குழுக்கள் அமைத்து, நாள்தோறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6,220 புகார்கள் வந்ததன் பேரில் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவை அகற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு பணி தாமதமின்றி நடைபெற கூடுதலாக 10 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஏதேனும் புகார்கள் இருந்தால் 18005997626 மற்றும் 044-27661950, 044-27661951 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
இந்த தேர்தலில் பொதுமக்கள் சுமுகமான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீத்தாலட்சுமி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர்மீரான் ஒலி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சுகாதார அலுவலர் கோவிந்தராஜுலு, உதவி இயக்குனர் கண்ணன் இளங்கோவன், ஊத்துக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மாலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.