சுயேச்சை வேட்பாளர் குடும்பத்தினருடன் தர்ணா
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம்:-
சேலம் மாநகராட்சி 1-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதேபோல், பாரத மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் கதிர்வேல் என்பவர், 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது, அங்கு வாக்காளர்களிடம் ஓட்டுக்காக அரசியல் கட்சியினர் பணம் கொடுத்ததாகவும், இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்யக்கூடாது எனவும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கதிர்வேல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இந்தநிலையில், நேற்று அதிகாலை சுயேச்சை வேட்பாளர் கதிர்வேல் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் வந்தார். பின்னர் கதிர்வேல் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி கமிஷனர் வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் சம்பங்கி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் கதிர்வேலை சமாதானப்படுத்தி விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடந்த விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, தாக்குதலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்திலும் சுயேச்சை வேட்பாளர் கதிர்வேல் புகார் மனு அளித்துள்ளார்.