தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம்
நெல்லை அருகே தாழையூத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கும்படி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் தாழையூத்து சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் கலந்து கொண்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி முககவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை கூறினார். இந்த கூட்டத்தில் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வள்ளியூர், திசையன்விளை, சேரன்மாதேவி, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசாருக்கு தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.