கோவில் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

கோவில் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது.

Update: 2022-02-18 19:46 GMT
மீன்சுருட்டி:
இந்திய தொல்லியல் துறையின் மூலம் புராதன சின்ன பாதுகாப்பு சட்டம் 1958-ன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கங்கைகொண்ட சோழபுரம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 100 மீட்டருக்கு உள்ளாக அதனுடைய பரப்பளவில் எந்தவிதமான கட்டிடங்களோ கட்டவோ, சுரங்கப் பணிகள், சாலை பணிகள் போன்ற கட்டுமான பணிகளோ மேற்கொள்ளக் கூடாது. இந்திய தொல்லியல் துறை மத்திய அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொள்ள அனுமதி உண்டு. வேறு எந்த கட்டிடங்களும் கட்டுவதற்கு அனுமதி இல்லை.ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் எல்லையில் இருந்து 78 மீட்டருக்குள் ஓய்வு இல்லம் கட்டிடத்தை கட்டி வந்தார். இதற்கு அவர் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை இந்திய தொல்லியல் துறை ஆட்சேபித்து, கட்டுமானத்தை நிறுத்தும்படியும், கட்டப்பட்ட கட்டிடத்தை அப்புறப்படுத்த கோரியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக அதே ஊரை சேர்ந்த பட்டுசாமி மகன் செந்தில் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தி, கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் இறுதி ஆணையாக இருவார காலத்திற்குள் கட்டிடம் தரைமட்டமாக அகற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றப்படாவிட்டால் மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கட்டிடத்தை இடித்து அகற்ற காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த விதிமீறல் கட்டிடம் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியின் நேரடிப் பார்வையில் இடித்து அகற்றப்பட்டது. இரவு வரை இந்த பணி நடந்தது. அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், தாசில்தார் ஆனந்தன், ஒன்றிய ஆணையர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களின் அருகே தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடம் கட்டக்கூடாது என்று அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்