வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 12 பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-02-18 19:46 GMT
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). பிளம்பர். இவரது மனைவி மனோ அம்பிகா(30). இவர் விளாங்குடியில் பேன்சி பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த மனோ அம்பிகா, ராஜா ஆகியோர் நேற்று மாலை தங்களது வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது 2 மர்மநபர்கள் பின்பக்க வாசல் வழியாக  தப்பி ஓடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 12 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.81 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்