சுயேச்சை வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா?

சுயேச்சை வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதா? என்பது குறித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-18 19:46 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு வேட்பாளர்களின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதனை பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட பாளையம் மாதா கோவில் தெருவில் நேற்று இரவு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பலூர் பேரூராட்சியில் 14-வது வார்டில் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பறக்கும் படையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து பறக்கும் படையினர் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அதில் சோதனை செய்ததில் 50 கவர்களில் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் இருந்ததும், அந்த வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரம்யா சிவசங்கரின் புகைப்படம் மற்றும் சின்னம் அடங்கிய நோட்டீஸ் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக பறக்கும் படையினர் தெரிவித்தனர். மேலும் அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்