உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் பிணமாக மிதந்த வாலிபர்; கொலையா? போலீசார் விசாரணை
நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளநீர் கால்வாயில் பிணம்
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கண்டித்தான் குளம் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக நேற்று காலை முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் அவரது உடலில் துணியால் கல் கட்டப்பட்ட நிலையிலும் இருந்தது.
கொலையா? போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் உடலில் கல் கட்டப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.