சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தாக்கப்பட்டு இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ. போலீஸ் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
தற்போது சாட்சி விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் போலீசாரால் வக்கீல்கள் தாக்கப்பட்டதன் நினைவு தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (அதாவது இன்று) விடுமுறை மற்றும் தேர்தல் நாள் என்பதால், நேற்றையதினமே, வக்கீல்கள் அந்த தினத்தை கடை பிடித்து கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கும் நேற்று விசாரிக்கப்படவில்லை. ஆனால் இந்த வழக்கின் சாட்சியாக நேற்று ஆஜராவதற்கு அரசு மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் கோர்ட்டுக்கு வந்தார். அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.