முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரம்தான் வகுப்பு எடுக்கிறார்களா?-ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி
ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கிவிட்டு முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரம்தான் வகுப்பு எடுக்கிறார்களா? என்றும், ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
மதுரை,
ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கிவிட்டு முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரம்தான் வகுப்பு எடுக்கிறார்களா? என்றும், ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பணி வரன்முறை கோரி வழக்கு
புதுக்கோட்டையை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முத்து. இவர் கடந்த 2006-ம் ஆண்டில் பணி வரன்முறை செய்யப்பட்டார். ஆனால் 2004-ம் ஆண்டில் இருந்தே தனது பணியை வரன்முறை செய்து உரிய பணப்பலன்களை வழங்கக்கோரி அவர் அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து 2004-ம் ஆண்டு முதல் தனது பணியை வரன்முறை செய்யக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலமாக மாத சம்பளம் பெறுபவராகத்தான் மனுதாரர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைகளின்கீழ் கோர முடியாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் தனது கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.
14 மணி நேர பணி
இதற்கிடையே பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் வேலை நேரம் எவ்வளவு என்ற கேள்விக்கு வாரத்தில் 14 மணி நேரம் வகுப்பு எடுப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரம், 168 மணி நேரத்தை கொண்டது. இதில் முதுநிலை ஆசிரியர்கள் 14 மணி நேரம் மட்டும் பணியாற்றி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர்.
இந்த பணம், மக்களின் வரிப்பணம். எனவே தனியார் நிறுவன பணியாளர்களை விட, ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆசிரியர் தொழில் புனிதமானது. ஆசிரியர்கள் நல்ல நடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
குற்றங்கள் அதிகரிப்பு
தற்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளன.
கொரோனா காலத்தில் 4 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தன. சிறுதொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்க கடுமையாக போராடுகின்றனர்.
நடத்தையை கண்காணியுங்கள்
ஆனாலும் ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் முழு சம்பளம் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்கள் பணத்தை பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிடுவதும் அவசியம்.
ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.