பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-18 17:04 GMT
கொள்ளிடம்:
டீசல் விலை உயர்வை  கண்டித்து பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டீசல் விலை உயர்வை கண்டித்து
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளுக்கு பழையாறு துறைமுகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாதாரணமாக தனியார் பங்கு மூலம் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.19-க்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் துறைமுகத்தில் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 101.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துறைமுகத்தில் உள்ள பங்க் மூலம் மீனவர்களுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.83.59 விற்பனை செய்யப்படுகிறது.
முறைப்படி தனியார் பங்க் மூலம் விற்பனை செய்து வரும் நிலையில் 20 சதவீதம் குறைத்து மானியமாக வழங்க வேண்டும் என்பதே விதி. அப்படி வழங்கினால் ஒரு லிட்டர் டீசல் ரூ.72-க்கு மீனவர்களுக்கு கிடைக்கும். ஆனால் தற்போது அதிக விலை கொடுத்து டீசல் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. தனியார் பங்கைவிட துறைமுகத்தில் இயங்கி வரும் டீசல் பங்கில் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அதிக விலை ஏற்றத்தை கண்டித்து பழையார் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பைபர் படகு உரிமையாளர்கள் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் மீனவர்கள் 2-வது நாளாக பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பழையாறு விசைப்படகு மற்றும் பைபர் படகு உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்